பிரிட்டன் பொதுத் தேர்தல்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

பிரிட்டன்

பட மூலாதாரம், Getty Images

வியாழனன்று (டிசம்பர் 12) பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் ஐந்தாண்டிற்கு ஆட்சியில் இருக்கும்.

பிரிட்டன் பொதுத் தேர்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இந்த தேர்தல் எதற்காக?

பிரிட்டனில் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து முடிவு செய்ய 650 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர்.

இந்தியாவைப் போன்றே நாடாளுமன்றத்தின் கீழவைக்கான உறுப்பினர்களாக இந்த 650 பேர் தேர்வு செய்யப்படுவர்.

நாட்டை நடத்திச் செல்வதற்கான சட்டத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உருவாக்கும்.

வாக்கெடுப்பு எவ்வாறு செயல்படும்?

பிரிட்டன் பொதுத் தேர்தலில் மொத்தம் 46 மில்லியன் வாக்காளர்கள் 650 தொகுதிகளில் தங்களின் ஏதேனும் ஒரு தொகுதிக்கான உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிப்பர்.

18 வயது பூர்த்தியடைந்த எந்த ஒரு பிரிட்டன் பிரஜையும், அல்லது பிரிட்டனில் நிரந்தர விலாசம் பெற்ற காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த பிரஜையும் வாக்களிக்கலாம்.

வயதானவர்களே அதிகம் வாக்களிக்கின்றனர்

பொதுவாக வயதானவர்களே இளைஞர்களைக் காட்டிலும் அதிகமாக வாக்களிக்கின்றனர். 2017ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 20 -24 வயதுக்குட்பட்ட 59% பேர் வாக்களித்திருந்தனர். ஆனால் 60 -69 வயதுக்குட்பட்டோர் 77% சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை அளித்திருந்தனர்.

பிரிட்டன் நாடாளுமன்றம்

பட மூலாதாரம், Getty Images

தேவாலயங்கள், பள்ளிகள் போன்ற பல இடங்களில் வாக்கெடுப்பு நடைபெறும். வாக்காளர்கள் தாங்கள் தேர்வு செய்ய விரும்பும் வேட்பாளர்களின் பெயருக்கு நேராக `க்ராஸ்` குறியீட்டை இட்டு சீல் செய்யப்பட்ட வாக்குப்பெட்டியில் அதனைச் செலுத்துவர்.

யாரெல்லாம் போட்டியிட முடியும்?

தேர்தல் நடைபெறும் தேதியில் 18 வயதை பூர்த்தியடைந்த யாரும் தேர்தலில் போட்டியிடலாம். அவர்கள் பிரிட்டன் பிரஜையாகவோ அல்லது பிரிட்டனில் நிரந்தர விலாசம் பெற்ற காமன்வெல்த் நாட்டை சேர்ந்த பிரஜையாகவோ இருக்க வேண்டும்.

வேட்பாளர்கள் 500 பவுண்டை (இந்திய மதிப்பில் 46,691ரூபாயை) வைப்புநிதியாக கட்ட வேண்டும். ஆனால் அந்த வேட்பாளர் குறைந்தது 5 சதவீத வாக்கைப் பெற வேண்டும் இல்லையேல் அவர்களுக்கு இந்த பணம் திரும்பக் கிடைக்காது.

சிறைவாசிகள், நீதிபதிகள், காவல்துறையினர், ஆயுதப்படையினர், குடிமைப் பணியாளர்கள் ஆகியோர் தேர்தலில் போட்டியிட முடியாது.

இந்த வருடம் 650 தொகுதிகளில் மொத்தம் 3322 பேர் போட்டியிடுகின்றனர்.

அதில் டேவிட் என்ற பெயரில் மட்டும் 91 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் 18ஆவது பெயராக முதல் பெண் பெயர் வேட்பாளராகச் சாரா என்பவர் பட்டியலில் உள்ளார்.

வெற்றியாளர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்?

அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பெரும்பான்மைக்கு 326 இடங்கள் தேவை; பலர் ஏதேனும் அரசியல் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டாலும், சில சுயேச்சை வேட்பாளர்களும் உண்டு.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கலாம்.

பிரிட்டனின் பிரதமர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட மாட்டார். வெற்றி பெற்ற கட்சியின் உறுப்பினர்களால் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் ராணி எலிசபெத்தால் பிரதமராக நியமிக்கப்படுவார்.

இந்தத் தேர்தலில் முக்கிய அம்சம் என்ன?

பிரெக்ஸிட்

பட மூலாதாரம், AFP

இந்த தேர்தலில் பிரெக்ஸிட்டே முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதே பிரெக்ஸிட் என்று அழைக்கப்படுகிறது.

போரீஸ் ஜான்சன் பிரதமராக பதியேற்றபோது அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் என தெரிவித்திருந்தார்.

தற்போது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதன்பிறகு பிரெக்ஸிட் குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.

முக்கிய கட்சிகள்

போரீஸ்

பட மூலாதாரம், Getty Images

கன்செர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் நேஷனல் கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2017ஆம் தேர்தலில் என்ன ஆனது?

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தலில் பிரிட்டனின் இரண்டு முக்கிய கட்சிகளான கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி ஆகிய இரண்டுமே பெருன்பான்மையை பெறவில்லை.

இரண்டு கட்சிகளில் அதிக எம்.பிகளை கொண்ட கன்சர்வேடிவ் கட்சி ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வைத்தது.

318 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றது. 262 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது, ஸ்காடிஷ் நேஷனல் கட்சி 35 இடங்களைப் பெற்றது. மொத்தம் 68.7 சதவீத வாக்குகள் பதிவாகின.

முடிவுகள் எப்போது வெளியாகும்?

பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 12 அன்று காலை 7 மணி முதல் இரவு பத்து மணி வரை நடைபெறும். அதன்பிறகு இரவு மற்றும் அடுத்த நாளில் முடிவுகள் வெளியாகும்.

முடிவுகள் அனைத்தும் வெளியானபோது வெற்றி பெற்ற கட்சியின் தலைவர் பக்கிங்காம் அரண்மனையில் ராணியைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர வேண்டும்.

அதன் பிறகு அவர் பிரதமரின் பாரம்பரிய வீடான 10 டவுனிங் வீதிக்கு வரவேண்டும்.

பொதுவாக அவர்கள் வீட்டின் வெளியே நின்று தங்கள் கட்சியின் திட்டம் குறித்து பேசுவார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: