ரஜினிகாந்த்: காலத்தை கடந்த நாயகன் அரசியலில் சாதிப்பது சாத்தியமா?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
தர்பார் ரஜினி

பட மூலாதாரம், Darbar

ரஜினிகாந்த் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறந்த, வெற்றிகரமான கலைஞராக நிலைத்து நிற்கிறார். சிறிய சிறிய மாற்றங்களோடு தன்னைப் புதுப்பித்தும் வருகிறார். அவர் வெற்றிகரமான நடிகராகத் தொடரப் போகிறாரா அல்லது போட்டி மிகுந்த அரசியல் களத்தில் எதிர்நீச்சல் போடப்போகிறாரா?

70 வயதை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்த், ஆசியாவின் அதிக ஊதியம் பெறும் நடிகர்களில் ஒருவர். 1975ல் துவங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தர்பார்வரை 167 திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ரஜினிகாந்த், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் சினிமா உலகின் மீது பெரும் ஆதிக்கம் செலுத்தியவர்.

தற்போது 168வது படத்திற்கான பணிகளில் தீவிரமாக இருக்கும் ரஜினிகாந்த், கடந்த சில ஆண்டுகளில் திரைப்படங்களில் நடிப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு வந்த முதல் இருபது ஆண்டுகளில் சுமார் 150 படங்களில் நடித்த அவர், அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் வெறும் 17 படங்களிலேயே நடித்திருக்கிறார் என்பது ஒரு ஆச்சரியமளிக்கும் தகவல்.

1975ல் நடிக்கத் துவங்கிய ரஜினியின் காலகட்டத்தை மூன்றாகப் பிரிக்கலாம்: 1975லிருந்து 1995வரை ரஜினி தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டம், 90களின் மத்தியிலிருந்து 2016வரை அவ்வப்போது படங்களை தந்துவந்த காலகட்டம், 2016க்குப் பிறகு அரசியல் ஆர்வம் ஒரு பக்கமும் நடிப்பு ஒரு பக்கமுமாக பயணிக்கும் தற்போதைய காலகட்டம்.

ரஜினி

பட மூலாதாரம், DINODIA PHOTOS

இதில் மிக வெற்றிகரமான காலகட்டம் சந்தேகமே இல்லாமல் 1975 முதல் 1995 வரையிலான காலகட்டம்தான். ரஜினிகாந்த், விஜயகாந்த், சந்திரசேகர் போன்ற கருமை நிறம் கொண்ட, சாதாரணமான தோற்றமுடைய பலர் கதாநாயகராக, வெற்றிகரமான நடிகர்களாக உருவெடுத்த ஒரு யுகத்தின் பிரதிநிதி ரஜினிகாந்த்.

ஒரு காலகட்டம்வரை, இந்த நாயகர்களில் ஒருவராக இருந்த ரஜினி, 80களின் மத்தியப் பகுதிக்குள் யாராலும் போட்டியிட முடியாத ஒரு உயரத்தைத் தொட்டார். அதற்கடுத்த பத்தாண்டுகளில் வசூல் ரீதியாக அவர் தன்னுடைய சாதனைகளையே தொடர்ந்து முறியடித்துக்கொண்டிருந்தார். அதன் உச்சகட்டமாக பாட்ஷா அமைந்தது.

ஆனால், அதற்குப் பிறகு அவருக்கே சலிப்புத்தட்டியதோ என்னவோ, அவர் படங்களில் நடிக்கும் வேகம் வெகுவாகக் குறைந்தது. 2010ல் எந்திரன் படம் வெளியான பிறகு அவரது உடல்நலம் குன்றவே, அதற்குப் பிறகு அவர் படங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழும் அளவுக்கு இடைவெளி விழுந்தது. இருந்தபோதும், கோச்சடையான், லிங்கா படங்களின் மூலம் மீண்டும் திரையில் அவதரித்தார் ரஜினி.

தற்போது காலா, 2.0, பேட்ட படங்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றியும் கவனிப்பும் மீண்டும் ரஜினிக்கு ஒரு பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். ஏ.ஆர். முருகதாஸின் தர்பார், சிவாவுடன் அடுத்த படத்திற்கான பணிகள் என மிகத் தீவிரமாக இருக்கிறார் ரஜினிகாந்த்.

தமிழ் திரையுலகில் இப்போதும் வசூல் ரீதியாக ஒரு முக்கியமான நடிகர்தான் ரஜினி. ஆனால், ரஜினி இனிமேலும் இதுபோலவே எவ்வளவு படங்களை நடிப்பார் என்பது ஒரு முக்கியமான கேள்வி.

2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியல் கட்சியைத் துவங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினியைப் போலவே சினிமாவில் பிரபலமாகி கட்சி துவங்கிய விஜயகாந்த், சட்டமன்றத் தேர்தலுக்கு சுமார் 8 மாதங்களுக்கு முன்பே கட்சியைத் துவங்கினார். கமல்ஹாசன் நாடாளுமன்றத் தேர்தலுக்கு சுமார் 14 மாதங்களுக்கு முன்பே கட்சியைத் துவங்கிவிட்டார். ஆனால், ரஜினி எப்போது துவங்குவார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

ரஜினி

பட மூலாதாரம், TWITTER

ஆனால், ரஜினி அரசியலுக்கு வராமல் சினிமாவிலேயே தொடர்ந்தால் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா ரசிகர்கள் பலருமே மகிழ்ச்சியடைவார்கள்.

"தமிழ் சினிமாவில் இருப்பவர்களிலேயே மிகத் திறமையான நடிகர் ரஜினிகாந்த். பல உணர்வுகளைக் காட்டக்கூடிய முகம் அவருடையது. என்னைப் பொறுத்தவரை ரஜினிகாந்தை தமிழ் சினிமா முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அவர் ஒரு மிகச் சிறந்த நடிகராக அடையாளம் காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவருடைய நடிப்பின் இடத்தை ஸ்டைல் எடுத்துக்கொண்டுவிட்டது. ரஜினியை இயக்க வருபவர்கள், இவருடைய சூப்பர் ஸ்டார் இமேஜையே பயன்படுத்த விரும்புகிறார்கள்" என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் து. ரவிக்குமார்.

இதையெல்லாம் மீறி, ரஜினி தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் படங்களில் நடிக்க வேண்டும் என்கிறார் ரவிக்குமார்.

ஆனால், சினிமாவில் ரஜினி கோலோச்சிய காலம் முடிந்துவிட்டது எனக் கருதுபவர்கள் இருக்கிறார்கள். "சினிமாவின் வியாபாரத்தில் ஒரு மாற்றம் இருக்கிறது. ஒரு பெரிய படம் வெளியாகும்போது, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான திரைகளில் அந்தப் படம் வெளியாகி, சில நாட்களிலேயே வசூல் அள்ளப்படுகிறது. ரஜினியின் படங்களில்தான் இந்தப் போக்கு துவங்கியது என்றாலும், இந்தச் சூழலில் ரஜினியால் நீடிக்க முடியாது" என்கிறார் ஆய்வாளர் ராஜன் குறை.

இம்மாதிரி போக்கிற்கு ரசிகர்களின் பலம் மிக முக்கியம். ரஜினியின் ரசிகர்கள் வயதானவர்கள். விஜய், அஜீத் ரசிகர்கள் வந்து குவிவதுபோல முதல் சில நாட்களில் ரஜினிக்கு ரசிகர்கள் குவியப்போவதில்லை. நாட்கள் செல்லச்செல்ல இது மேலும் மேலும் குறையும் என்கிறார் ராஜன் குறை.

ரஜினி தன்னுடைய இத்தனை ஆண்டுகாலப் பயணத்தில் சினிமா என்ற துறைக்கு நிறைய பொருளீட்டிக் கொடுத்திருக்கிறார். ஆனால், சினிமா என்ற கலைக்கு என்ன செய்திருக்கிறோம் என்ற கேள்வியை அவர் எழுப்பிக்கொள்ள வேண்டும் என்கிறார் ரவிக்குமார். இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் ரஜினி சினிமாவை விட்டு விலகினால், மனக்குறையோடுதான் இருப்பார் என்கிறார் அவர்.

ரஜினி

பட மூலாதாரம், Getty Images

ரஜினி சினிமா துறையைவிட்டு விலகி, அரசியலில் நுழைந்தால், அங்கும் அவர் இதே செல்வாக்கோடு இருப்பாரா? "ரஜினி சினிமாவில் பெரும்பான்மை மக்களின் கவனத்தை ஈர்த்த, ரசிக்கவைத்த ஒரு கதாநாயகன். அவரது அந்தப் பிரபலத்தை பயன்படுத்திக்கொள்ள கடந்த 25 ஆண்டுகளாக முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், அது நிறைவேறாத நிகழ்வாகவே இருக்கிறது. ஆனால், அப்படி அவர் அரசியலில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்குமெனச் சொல்ல முடியாது. அதற்கு ஆழமான அரசியல் காரணம் இருக்கிறது. எம்ஜிஆரைப் போல ரஜினி வெகுமக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றவர் அல்ல. அல்லது விஜயகாந்த் போல உழைப்பைச் செலுத்தியவர் அல்ல. ஏதோ ஓரு வகையில் அதிகார மையத்தை நோக்கியே இருந்தவர்" என்கிறார் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

ஒரு பக்கம் ரஜினி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் நெருக்கமாக இருக்க, மற்றொரு பக்கம் அவரது சினிமா மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டு முரண்பாடுகளுக்கு இடையிலும் பாலமே கிடையாது என்கிறார் அவர்.

இனிமேல் ரஜினி அரசியலில் இறங்கி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற வேண்டுமானால் கடுமையான உழைப்பு தேவை. அதை அவரால் செய்ய முடியாது. இதற்கு அவருடைய வயதோ, உடல்நிலையோ காரணமல்ல. ரஜினிக்கு அவற்றில் எல்லாம் ஈடுபாடு இல்லை என்பதுதான் காரணம் என்கிறார் அவர்.

ஆக, ரஜினி அரசியலில் இறங்காமல் தொடர்ந்து நடித்தால் அவருடைய செல்வாக்கும் கவர்ச்சியும் நீடிக்குமா? "இருக்கலாம். ஆனால், அரசியலில் இறங்கி, மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது ரஜினி வெளிப்படுத்தப்போகும் கருத்துகள் அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். சினிமாவிலும் அரசியலிலும்" என்கிறார் ராமு மணிவண்ணன்.

ரஜினியைப் பொறுத்தவரை வரும் ஆண்டு மிக முக்கியமானது. பல முக்கிய முடிவுகளை அவர் எடுத்தாக வேண்டும். தனக்கு எளிதாகக் கைவரக்கூடிய, தனக்கு மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தித்தந்த சினிமாவிலேயே தொடரப்போகிறாரா அல்லது அரசியலில் இறங்கி ஆழம் பார்க்கப்போகிறாரா என்பதை ரஜினி இந்த ஆண்டில் முடிவுசெய்தாக வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: