தமிழக தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு?

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக
தமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவில் லட்சக்கணக்கான அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவிலிருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வருவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக மலேசிய இந்திய வர்த்தகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மலேசியாவில் பிரதமர் துன் மகாதீர் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசாங்கத்திடம் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்துப் பலமுறை எடுத்துக் கூறியும் பலனேதுமில்லை என்று சில வர்த்தக சங்கங்கள் கூறுகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை மலேசிய அரசு புறக்கணிப்பதாகவும் ஒரு புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டின் கீழ் 20 இந்திய வர்த்தகத் தொழிற் சங்கங்கள் மிக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டன. அதன் முடிவில் அரசாங்கத்திடம் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன் பிறகு பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தங்களுக்கு உரிய எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என வர்த்தகர்கள் கூறுகின்றனர். இந்தியர்களின் ஆறு முதன்மை பாரம்பரியத் தொழில்துறைகளில் அந்நிய தொழிலாளர்களைப் பணியமர்த்த மலேசிய அரசு அனுமதி மறுத்துள்ளதாக அத்தொழில்கள் சார்ந்த வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்திய வர்த்தகர்கள் எதிர்நோக்கும் ஆள்பற்றாக்குறை குறித்து மலேசிய அமைச்சரவையில் கேள்வி எழுப்ப ஒருவரும் இல்லை என்று வர்த்தகர்கள் சாடியுள்ள நிலையில், அரசாங்கம் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து வருவதாக மலேசிய மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய

பட மூலாதாரம், Kula

படக்குறிப்பு,

மலேசிய மனிதவள அமைச்சர் குலசேகரன்

மலேசிய இந்திய உணவகங்கள் சங்கம், மலேசிய இந்திய முஸ்லிம் உணவகங்கள் சங்கம், மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்கம், மலேசிய இந்திய மளிகைக்கடை உரிமையாளர் சங்கம் என பல்வேறு சங்க நிர்வாகிகளிடம் பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. அதன் பின்னர் அமைச்சர் குலசேகரனிடமும் விளக்கம் பெறப்பட்டது.

தமிழகத் தொழிலாளர்களை மலேசிய அரசு புறக்கணிப்பதாகக் கூறப்படுவதில் சிறிதளவும் உண்மை இல்லை என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், அந்நியத் தொழிலாளர்களுக்கு அவர்களைப் பணியில் அமர்த்துவோர் உரிய அடிப்படை வசதிகளைக் கூட செய்து தருவதில்லை என அவர் சாடினார்.

4 ஆயிரம் கடைகள்: ஒவ்வொன்றுக்கும் தலா 16 தொழிலாளர்கள் தேவை

மலேசியாவில் இந்திய உணவகங்கள் மூலம் சுமார் 4 பில்லியன் மலேசிய ரிங்கிட் அளவுக்கு வியாபாரம் நடப்பதாகச் சொல்கிறார் மலேசிய இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவரான முத்துசாமி.

இந்தச் சங்கத்தில் தற்போது 1200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பதிவு செய்யப்படாத உணவகங்களையும் சேர்த்துக் கொண்டால் இந்த எண்ணிக்கை நான்காயிரத்தை கடந்து நிற்கும் என்கிறார்.

ஒவ்வொரு கடைக்கும் குறைந்தபட்சம் தலா 16 தொழிலாளர்கள் தேவை என்று குறிப்பிடும் முத்துசாமி, தற்போது பெரும்பாலான கடைகளில் ஐம்பது விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே இருப்பதாகக் கவலை தெரிவிக்கிறார்.

தமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு

பட மூலாதாரம், MUTHUSAMY

படக்குறிப்பு,

மலேசிய இந்திய உணவகங்கள் சங்க தலைவர் முத்துசாமி.

"உள்நாட்டுத் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த நாங்கள் தயார். ஆனால், இன்றைய இளைஞர்கள் முதல் நாளன்று பணிக்கு வந்தால் அடுத்த நாள் வருவார்களா என்பது தெரியாது. இப்படி ஒரு நிச்சயமற்ற தன்மையுடன் வியாபாரம் செய்ய இயலாது.

"அதே சமயம் தமிழகத் தொழிலாளர்களிடம் இந்தப் பிரச்சனை இல்லை. கடல் கடந்து வேலை செய்வதால் அடிக்கடி விடுப்பு எடுக்க மாட்டார்கள். ஆண்டுக்கு ஒருமுறையோ இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையோ ஊருக்குச் சென்று ஒரு மாதத்தில் திரும்புவார்கள்.

"தற்போது தொழிலாளர்கள் வேண்டுமெனில் இணையம் வழிதான் பதிவு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு புது நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. அவற்றை நடைமுறைப்படுத்த எங்களுக்குக் கால அவகாசம் தேவைப்படுகிறது. கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகள் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளால் மூடப்பட்டுள்ளன. அதேசமயம் ஒரு உள்நாட்டுத் தொழிலாளரைப் பணி அமர்த்தினால் 3 அந்நியத் தொழிலாளர்களைத் தருவதாக அரசாங்கம் சொல்லியிருக்கிறது. இதுபோன்ற சில அம்சங்களை நாங்களும் வரவேற்றுள்ளோம்," என்கிறார் முத்துசாமி.

குறைந்தபட்சம் 16 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை

உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவது நல்ல விஷயம் தான் என்கிறார் மலேசிய இந்திய முஸ்லிம் உணவகங்கள் சங்கத் தலைவர் ஜவஹர் அலி.

எனினும், அவை தொடர்பான புதிய சட்டதிட்டங்களை, விதிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துவது கடினம் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

"புதிய மற்றும் முக்கிய சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த சற்று கால அவகாசம் தரவேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. மலேசியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளிப்பது தொடர்பாக நாங்களும் பல வகையிலும் விளம்பரங்கள் செய்து பார்க்கிறோம். ஆனால் அவற்றுக்குப் பலன் ஏதுமில்லை.

உள்நாட்டுத் தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்பதால் நாங்கள் அவர்களைத் தவிர்க்கிறோம் என்பது சரியல்ல. அப்படிப் பார்த்தால் அந்நியத் தொழிலாளர்களுக்கும் பெர்மிட் எடுப்பது, சம்பளம் கொடுப்பது, தங்க வைப்பது என நிறைய செலவுகள் உள்ளன.

தமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு

பட மூலாதாரம், Jawahar

படக்குறிப்பு,

மலேசிய இந்திய முஸ்லிம் உணவகங்கள் சங்கத் தலைவர் ஜவஹர் அலி

நாடு முழுவதும் இந்திய முஸ்லிம் உணவக சங்கத்தில் பதிவு பெற்ற 4 ஆயிரம் உணவகங்கள் உள்ளன. பதிவு செய்யப்படாத கடைகளும் உள்ளன. ஒவ்வொரு கடைக்கும் குறைந்தபட்சம் 4 அந்நியத் தொழிலாளர்கள் என்று கணக்கிட்டாலும் கூட 16 ஆயிரம் தொழிலாளர்கள் தேவை.

முன்பெல்லாம் 10 ஆண்டுகள் வேலை பார்த்த ஒருவர் ஊருக்குச் சென்றுவிட்டால் (தமிழகம்) அவருக்குப் பதிலாக ஒரு புதிய தொழிலாளரை வரவழைக்க முடியும். இதை 'ஒன் டு ஒன்' என்போம். சுமார் இரு வாரங்களுக்குள் இதற்கான அனுமதி கிடைத்துவிடும். தற்போது இதற்கான நடைமுறை நீளமாகி உள்ளது. உள்துறை அமைச்சு, தொழிலாளர் அமைச்சு என்று நம் விண்ணப்பம் பல இடங்களுக்கும் செல்கிறது.

ஒரே குடையின் கீழ் செயல்படுத்தப்பட்ட விஷயம் தற்போது 3 இலாகாக்களின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிகை அலங்காரக் கடைகள், பலசரக்குக் கடைகள் என இதர துறைகளிலும் தொழிலாளர் பற்றாக்குறையால் பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. இதனால் பல கடைகள் மூடப்படும் நிலை ஏற்படுகிறது.

திடீரென தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் தொடர்ந்து வியாபாரத்தைக் கவனிக்க முடியவில்லை. அந்த வகையில் மலேசியா முழுவதும் குறைந்தபட்சம் 5 விழுக்காடு கடைகளாவது மூடப்பட்டு விட்டன. எனவேதான் புதிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குக் கால அவகாசம் கேட்கிறோம். குறைந்தபட்சம் 2-3 ஆண்டுகள் அவகாசம் அளித்தால் நன்றாக இருக்கும்.

ஏற்கெனவே இருந்த கடைகள் மட்டுமல்லாமல் புதிதாகத் திறக்கப்பட இருந்த கடைகளும் கூட பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களை வரவழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் நிறைய செலவு செய்து தொடங்கப்பட இருந்த கடைகள் எந்த முன்னேற்றமும் இன்றி மூடப்பட்டுள்ளன," என்கிறார் மலேசிய இந்திய முஸ்லிம் உணவகங்கள் சங்கத் தலைவர் ஜவஹர் அலி.

நீண்டகாலமாக நீடிக்கும் பிரச்சனை இது

அந்நியத் தொழிலார் பிரச்சனை என்பது பல ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது என்கிறார் மலேசிய இந்திய மளிகைக்கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ராஜா.

இது தொடர்பாக அரசாங்கத்திற்கும் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்தாலும் பலனேதும் இல்லை என இவர் வருத்தப்படுகிறார்.

"நிறைய பேர் கடைகளை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்துதான் தொழிலாளர்களைத் தருவிக்க வேண்டுமா? வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைப் பணியமர்த்தத் தயங்குவது ஏன்?" என்று கேட்டால், அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறார் ராஜா.

"தமிழகத் தொழிலாளர்கள் எந்தவொரு வேலையையும் உடனுக்குடன் கற்றுத் தேர்கிறார்கள். மேலும் அவர்களுக்குத் தொழில்நுட்பங்களும் நுணுக்கங்களும் தெரிந்திருக்கின்றன. பாரம்பரியத் தொழில்களுக்கு அப்படிப்பட்ட தொழிலாளர்கள்தான் தேவை.

உதாரணமாக கஸ்தூரி மஞ்சள் உட்பட பிரசவத்துடன் தொடர்புள்ள பொருட்களைக் கேட்டு வருவார்கள். அந்தப் பொருட்களை வாங்கிச் சென்று அவற்றைக் கழுவிக் காயவைத்து அரைத்துதான் பிரசவமான பெண்களுக்குக் கொடுப்பார்கள். அதேபோல் மலாய்காரர்கள் இத்தகைய பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.

இந்த விவரங்களை அறிந்த தொழிலாளர்கள்தான் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கமுடியும். தற்போது எங்களுக்கு உரிய ஆட்கள் கிடைப்பதில்லை. மேலும் எங்கள் தொழிலை FROZEN தொழில் என்று அரசு நிர்ணயித்திருந்தது. தற்போது இத்தொழிலை UNFREEZE செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எனவே, தொழிலாளர்களைத் தருவிப்பதற்கான தடை அகலும் என எதிர்பார்க்கிறோம்.

சில்லறை விற்பனைக் கடைகள், மொத்த விற்பனைக் கடைகள் என மலேசியா முழுவதும் அதிகபட்சமாக எங்களுக்கு 5 ஆயிரம் தொழிலாளர்கள்தான் தேவைப்படுவார்கள். சில்லறைக் கடைகளுக்கு குறைந்தபட்சம் 5 பேர் தேவை என்று கேட்கிறோம். ஒருவேளை நாங்கள் தேவையின்றி அதிக தொழிலாளர்கள் கேட்பதாகக் கருதினால் அரசாங்கம் ஆய்வு மேற்கொண்டு அதன்பிறகு முடிவு செய்யட்டும். அதை நாங்கள் எதிர்க்கவில்லை.

இது தொடர்பாக மனிதவள அமைச்சர் டத்தோ குலசேகரனைச் சந்தித்துக் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் கலந்தாலோசித்து முடிவைச் சொல்வதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த உறுதிமொழியைக் கொடுத்து ஆறேழு மாதங்களாகி விட்டன. ஆனால், எதுவும் நடக்கவில்லை. எங்கள் தொழில் மட்டுமல்லாமல் உலோகத் துறை, ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட இதர தளங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன," என்கிறார் ராஜா.

"நகைகள் நம் அன்றாட வாழ்க்கையுடனும் கலாச்சாரத்துடனும் ஒன்றிப் போனவை"

நகைக்கடை என்றால், 'ஒயிட் காலர் ஜாப்' அழுக்குப் படாத வேலை... யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று அரசு கருதுவதாகச் சொல்கிறார் மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல். நகைக்கடை தொழில் என்பது மிகவும் நுட்பமானது, பாரம்பரியமானது என்பதுடன், அவற்றையும் மீறி இதில் கலாசாரமும் கலந்துள்ளது எனச் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு

பட மூலாதாரம், Getty Images

"அந்நியத் தொழிலாளர்களைக் குறைக்கவேண்டும் என்பதில் உலக நாடுகள் பலவும் முனைப்பாக உள்ளன. ஒருவகையில் இது நல்ல விஷயம்தான். ஆனால் உடல் உழைப்பு வேலைகளைச் செய்ய உரிய இளைஞர்கள் முன்வருவது இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எங்களைப் போன்று பாரம்பரியத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பலர் ஐம்பது வயதைக் கடந்து விட்டனர். ஆனால் இவர்களுக்கு மாற்றாக உள்நாட்டுத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. அரசாங்கமும் இதைக் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

மலேசியாவில் சுமார் 300 பொற்கொல்லர் குடும்பங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தக் குடும்பங்களில் இருந்து வரக்கூடிய 600 குழந்தைகளும் இதே தொழிலை மேற்கொள்ளப் போவதில்லை. ஒரு ஐம்பது பேர் பொற்கொல்லர்களாகக் கூடும். ஆனால், அந்த 50 பேரும் கூட முதலாளிகளாகவே விரும்புகிறார்கள்.

எங்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட 150 பொற்கொல்லர் கடைகள் உள்ளன. பதிவு செய்யப்படாத கடைகளையும் சேர்த்தால் நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 250 ஆக இருக்கும். ஒரு கடைக்கு குறைந்தபட்சம் 14 தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதுகுறித்து மனிதவளத் துறை அமைச்சரிடம் பலமுறை தெரிவித்துள்ளோம். எனினும் எங்கள் தொழிலுக்கு தொழிலாளர்களை தருவிக்க அமைச்சரவையில் அனுமதி கிடைக்கவில்லை என்கிறார். எல்லாம் தெரிந்த அவரே இப்படிச் சொன்னால் என்ன செய்வது?

தமிழக தொழிலாளர்களும் மலேசியாவுக்கு வர சுலபத்தில் சம்மதிப்பதில்லை

"எங்களுக்கு 10 ஆயிரம் தொழிலார்கள் தேவை எனில் 2 ஆயிரம் பேரையாவது தாருங்கள் என்றுதான் கேட்கிறோம். இன்றைய சூழ்நிலையில் ஊரிலிருந்து (தமிழகம்) ஆட்களை வரவழைப்பதும் கூட அவ்வளவு சுலபமல்ல. தேவையான ஆட்கள் கிடைப்பதில்லை.

நாம் தரக்கூடிய சம்பளம் போதுமானதாக இல்லை என்கிறார்கள். நாடு விட்டு நாடு செல்லும்போது குறைந்த சம்பளத்துக்கு ஏன் செல்ல வேண்டும்? என்று கேட்கிறார்கள். நகைத்தொழில் என்பது அரசாங்கத்துக்குப் பெரிய அளவில் வருமானத்தைத் தரக்கூடிய ஒரு தொழிலாகும்.

தமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு

பட மூலாதாரம், abdul-rasul

படக்குறிப்பு,

மலேசிய இந்திய பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் ரசூல்

ஒரு குழந்தை பிறந்தது முதல், சடங்கு செய்வது, திருமண வைபவம், வளைகாப்பு, சீமந்தம் என அனைத்துத் தருணங்களிலும் நகை என்பது தேவைப்படுகிறது. இதுதான் நம் கலாசாரம். சேலை கட்டினால்தான் பெண்ணுக்கு அழகு என்பதுபோல் பெண்கள் அணிந்தால்தான் நகைகளுக்கும் அழகு. உள்நாட்டு மக்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுப்பயணிகளும் நகைகளை வாங்கிச் செல்கிறார்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் திருமணம் நிச்சயித்த பின்னர் பொற்கொல்லரை வீட்டிற்கே அழைப்பார்கள். அங்கு சென்று பொன்னை உருக்கித் தாலி செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது மரபு. இப்படி ஓர் இனத்தின் கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்தவை பொன் ஆபரணங்கள். அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் போனால் இக்கலாச்சாரம் வழக்கொழிந்து போய்விடும்," என்கிறார் டத்தோ அப்துல் ரசூல்.

அரசிடம் இருந்து நல்ல பதில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது: டத்தோ கோபாலகிருஷ்ணன்

அனைத்து முக்கிய வர்த்தக சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பிரச்சனை குறித்து விவாதித்ததாகவும், அதன் பின்னர் பிரதமரைச் சந்தித்துப் இது தொடர்பாகப் பேசியதாகவும் சொல்கிறார் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன்.

கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட பிரதமர் மகாதீர், மிக விரைவில் உள்துறை அமைச்சுடன் கலந்து பேசி நல்ல முடிவைத் தெரிவிப்பதாகக் கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

"போதுமான தொழிலாளர்கள் இல்லாததால் உணவகங்கள், கடைகளை மூடவேண்டி இருப்பதாக சிலர் கூறுவது உண்மைதான். அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தெரிவிக்கின்றனர். அதேசமயம் நீங்கள் கடைகளைத் திறக்கலாம். இத்தனை தொழிலாளர்களைத் தருகிறோம் என்று யாரும் உத்தரவாதம் அளிக்கவில்லை.

தமிழகத் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறதா மலேசிய அரசு

பட மூலாதாரம், Gobalakrishnan

படக்குறிப்பு,

மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன்.

நமது கோரிக்கைகளை முன்வைக்கிறோம். அரசாங்கம் அவற்றைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறது. நல்ல அணுகுமுறையைப் பின்பற்றி நம் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

உங்களுடைய கோரிக்கைகளை ஏற்க இயலாது; நிறைவேற்ற இயலாது என்று அரசுத் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அவ்வாறு ஏற்க மறுத்திருந்தால் நாம் அடுத்து செய்யவேண்டியது குறித்து யோசித்திருக்கலாம். கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றுவது என்பது குறித்து யோசித்து வருவதாகவே அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

எனவே அரசுத்தரப்பில் இருந்து நல்ல பதில் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் காத்திருப்போம்," என்கிறார் டத்தோ கோபாலகிருஷ்ணன்.

"அந்நிய தொழிலாளர்கள் படுப்பதற்கும் கூட இடமில்லை, ஓய்வும் இல்லை"

இந்நிலையில் தமிழகத் தொழிலாளர்கள் மலேசியாவில் பணியாற்ற எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை என அந்நாட்டின் மனிதவளத் துறை அமைச்சர் குலசேகரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

வங்காள தேச தொழிலாளர்களுக்கு மட்டுமே தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

"தமிழகத்தில் கூட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வருகிறார்கள். அதேபோன்றுதான் மலேசியாவிலும் நடக்கிறது. அதற்காக தமிழகத் தொழிலாளர்கள் மலேசியாவுக்கு வரக்கூடாது, வேலை பார்க்கக் கூடாது என்று அர்த்தமல்ல.

அதேசமயம் ஏராளமான தமிழர்கள் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு வந்து பிறகு நாடு திரும்புவதில்லை. அதுவும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழகத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்து விட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மையில்லை. இந்திய உணவகங்களில் தமிழகத் தொழிலாளர்கள்தான் பணியாற்றுகிறார்கள். மலேசிய இந்திய முஸ்லிம் உணவகங்களிலும் பணியாற்றும் தொழிலாளர்களும் நூறு விழுக்காடு தமிழகத்தில் இருந்துதான் வருகின்றனர்.

"அண்மையில்கூட ஒரு வானொலி நிறுவனத்திற்கு 150 ஊழியர்களைப் பணியமர்த்த அனுமதி அளித்தோம். அவர்கள் அனைவருமே தமிழகத்தில் இருந்துதான் வருகின்றனர். சில உணவுக் கடைகள் மூடப்பட்டுவிட்டதாகக் கூறுகிறீர்கள். இந்த நாடு எதை முதன்மையாக வைத்துச் செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

இரவும் பகலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதற்கு மலேசிய அரசு முன் உரிமை அளிக்கிவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மலேசியாவில் உள்நாட்டுத் தொழிலாளர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள் என்பதைதான் வலியுறுத்துகிறோம். உள்நாட்டுத் தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்கிறார்கள், அதேசமயம் தமிழகத்தில் இருந்து வரும் தொழிலாளர்களுக்குக் குறைவான சம்பளம் அளிக்கப்படுகிறது. எனவே, இருதரப்பையும் சமநிலைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது.

எல்லா தொழிலாளர்களும் வெளிநாடுகளில் இருந்தே வரவழைக்கப்பட்டால் பிறகு மலேசியாவில் இருப்பவர்களுக்கு என்ன மீதம் இருக்கும்? இந்நாட்டிலும் அனுபவம் உள்ள தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் அந்நியத் தொழிலார்களைப்போல் 12 மணி நேரம் வேலை செய்ய மாட்டார்கள். 8 மணி நேரம்தான் பணியாற்றுவர். நல்ல சம்பளமும் கொடுக்க வேண்டி இருக்கும்.

இதேபோன்ற உணவகங்கள்தான் சிங்கப்பூரிலும் உள்ளன. ஆனால் அங்கு தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் சம்பளமாக வழங்கப்படுகிறது. மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்று வேலை பார்ப்பவர்களும் உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க வேறு சில பிரச்சினைகளும் இருக்கின்றன. அந்நியத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் சட்டப்படி செய்து தரப்படுவதில்லை. நாங்கள் அமைச்சு சார்பாக ஆய்வுக்குச் சென்றபோது கழிவறையோரம் தொழிலாளர்கள் படுத்து உறங்குவதைப் பார்த்திருக்கிறோம். கூடுதல் நேரம் பணியாற்ற தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். சட்டப்படி ஒரு தொழிலாளர் மாதம் ஒன்றுக்கு 104 மணி நேரம்தான் கூடுதலாக வேலை பார்க்கலாம். ஆனால் பெரும்பாலான தொழிலாளர்கள் 200 மணி நேரம் கூடுதலாகப் பணியாற்றுகிறார்கள்.

இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அப்படி இருக்கும்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு தொழிலாளர்களை வரவழைக்க எப்படி அனுமதி கொடுக்க முடியும்?" என்று கேள்வி எழுப்புகிறார் அமைச்சர் குலசேகரன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: