குடியுரிமை சட்டத் திருத்த மசோதா : "இந்திய முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை" - அமித் ஷா

அமித் ஷா

பட மூலாதாரம், RSTV

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவால் இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். "யாராவது உங்களை அச்சத்திற்கு உள்ளாக்க முயற்சித்தாலும் அச்சப்படாதீர்கள்" என்று அவர் கூறினார்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா திங்கள்கிழமை அன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இன்று (புதன்கிழமை)மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

மசோதாவை அறிமுகப்படுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த சட்ட மசோதாவால் நாட்டில் இருக்கும் முஸ்லிம்கள் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டார். நரேந்திர மோதி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமித் ஷா தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கும் இந்திய முஸ்லிம்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த மசோதா குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இது குறித்து எதிர்கட்சிகள் அச்சத்தை பரப்புவதை நிறுத்த வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது. இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ஆனந்த் ஷர்மா, குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இந்திய அரசமைப்புக்கு எதிரானது என்றும் ஜனநாயத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: