அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோதியின் முழுமையான உரை

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை நிறைவடைந்தது

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோதி.

கடந்த ஆண்டு இது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியதையடுத்து, ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது.

சரியாக நண்பகல் 12.44 மணிக்கு மோதி ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டினார்.

அங்கே திரண்டிருந்த மக்கள் ஹர ஹர மகாதேவ் மற்றும் ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை எழுப்பி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

நிகழ்வில் பேசிய மோதி, "ஜெய் ஸ்ரீராம், ஜெய் சியாராம் கூறி தன் உரையை தொடங்கினார் பிரதமர் நரேந்திர மோதி.

கூட்டத்தில் இருந்தவர்களை கோஷமிடக் கோரிய பிரதமர் மோதி, "அயோத்தியில் மட்டும் இந்த கோஷம் எதிரொலிக்கவில்லை, பிரபஞ்சம் முழுவதும் எதிரொலிக்கிறது," என்றார்.

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை: நரேந்திர மோதியின் முழுமையான உரை

பட மூலாதாரம், Getty Images

"ஒவ்வொரு இதயமும் ஒளிர்கிறது. ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது உணர்வுபூர்வமான தருணம். ஒரு நீண்ட காத்திருப்பு இன்றுடன் முடிகிறது," என்றார் மோதி.

"பல காலமாக ஒரு டெண்டில் தங்கி இருந்த ராம் லல்லாவுக்கு, ஒரு பெரிய கோயில் கட்டுகிறோம். பல நூற்றாண்டுகளாக கோயில் கட்டுவதும், இடிப்பதுமாக இருந்த சுழற்சி ராமஜென்ம பூமியில் இன்றுடன் முடிகிறது."

"ராம் மந்திர் நமது கலாசாரத்தின் நவீன சின்னமாக இருக்கும். நம் பக்தி, தேசிய உணர்வின் சின்னமாக மாறும். இந்த கோயில் கோடிக்கணக்கான மக்களின் கூட்டுத் தீர்மானத்தின் சக்தியையும் குறிக்கும். இது எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும்," என்று நிகழ்வில் பேசினார் மோதி.

இந்த கோயில் கட்டுவதன் மூலம், புதிய வரலாறு படைக்கப்படவில்லை, வரலாறு மீண்டும் திரும்புகிறது. ஒரு படகோட்டி, ஒரு பழங்குடி ராமருக்கு உதவியது போல, ஒரு குழந்தை கிருஷ்ணருக்குக் கோவர்த்தன மலையைத் தூக்க உதவியது போல, நம் அனைவரின் கூட்டு முயற்சியால் இந்த கோயில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் சின்னம் ராமர். அனைத்தும் ராமருக்கு உரியது. ராமர் அனைவருக்கும் உரியவர் என்று கூறினார் மோதி.

மேலும் அவர், "நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். மனிதக்குலம் ராமரை நம்பிய போது, வளர்ச்சி இருந்தது. நாம் பாதை மாறிய போது, அழிவின் கதவுகள் திறந்தன. நாம் ஒவ்வொருவரின் உணர்வையும் மனதில் கொள்ள வேண்டும்," என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: