எக்சிட் போல்: தமிழ்நாடு, புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அசாம் தேர்தல் கணிப்புகள் என்ன? திமுக, அதிமுக வாய்ப்பு எப்படி?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY

ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கலாம் என தெரிவிக்கின்றன. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசிற்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்திற்கு மட்டும் எட்டு கட்டங்களாக நடந்த தேர்தல் இன்று நிறைவடைந்தது.

இதையடுத்து பல தொலைக்காட்சிகளும் செய்தி நிறுவனங்களும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை இரவு 7 மணிக்குப் பிறகு வெளியிட்டு வருகின்றன.

ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பின்படி தமிழ்நாட்டில் தி.மு.கவுக்கு 160 முதல் 170 இடங்கள் கிடைக்குமென்றும் அ.தி.மு.கவுக்கு 58 - 68 இடங்கள் கிடைக்குமென்றும் மக்கள் நீதி மய்யத்திற்கு 2 இடங்களும் அ.ம.மு.கவுக்கு 4-6 இடங்களும் கிடைக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

ஏபிபி - சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 160 - 172 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 58 - 70 இடங்களும் மக்கள் நீதி மய்யத்திற்கு 2 இடங்களும் அ.ம.மு.கவுக்கு 2 இடங்களும் மற்றவர்களுக்கு 0- 3 இடங்களும் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Today's Chanakya கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 164-186 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 46 - 68 இடங்களும் மற்றவர்கள் 0 - 8 இடங்களில் வெல்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா டுடே Axis My India நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.கவுக்கு 175- 195 இடங்களும் அ.தி.மு.கவுக்கு 38 - 54 இடங்களும் அ.ம.முகவுக்கு 1-2 இடங்களும் ம.நீ.மவுக்கு 0 -2 இடங்களும் கிடைக்குமெனக் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை, பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் என்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெறுமென்றே கணித்துள்ளன. ரிபப்ளிக் - சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு 16 - 20 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 11 - 13 இடங்களும் கிடைக்குமெனக் கூறப்பட்டுள்ளது.

ஏபிபி - சி ஓட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு 19 - 23 இடங்களும் காங்கிரஸ் கூட்டணிக்கு 6 - 10 இடங்களும் மற்றவர்களுக்கு 1 - 2 இடங்களும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

தந்தி டி.வி கருத்துக் கணிப்பு

தந்தி டிவியின் கருத்துக் கணிப்புகளின் படி, அ.தி.மு.க. கூட்டணி 68 இடங்களில் வெல்லும் என்றும் தி.மு.க. 133 இடங்களில் வெல்லும் என்றும் 33 தொகுதிகளில் கடும் போட்டி நிலவுமென்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக் கணிப்புகள் குறித்த மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துகள் மாறுபடுகின்றன.

தி.மு.கவுக்கு பெரிய அளவில் வெற்றிபெறும் வாய்ப்பு இல்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

"இந்தத் தேர்தலில், கணக்குகளின்படி பார்த்தால் தி.மு.கவுக்கு சாதகமான நிலைதான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் கொடுத்த அ.தி.மு.க. செய்த நாளிதழ் விளம்பரம், ரேடியோ விளம்பரம், செலவழித்த பணம் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்ப முடியவில்லை. தவிர, வன்னியர்களுக்கு அளித்த உள் ஒதுக்கீடு, மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு போன்றவையும் ஆளும் அரசுக்கு சாதகம். ஆகவே என்னால் இந்தக் கருத்துக் கணிப்புகளை முழுமையாக நம்ப முடியவில்லை. இதையெல்லாம் மீறி தி.மு.க. வெற்றிபெற்றாலும் 130 இடங்களைப் பெறும். இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான பிரியன்.

ஆனால், இது எதிர்பார்த்த வெற்றிதான் என்கிறார் ஃப்ரன்ட்லைன் இதழின் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன். "நான் தி.மு.கவுக்கு 150 இடங்கள் கிடைக்குமென நினைத்தேன். ஆனால், கருத்துக் கணிப்புகளில் 160 - 190 இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள். இது முழுக்க முழுக்க மோதி எதிர்ப்பு ஓட்டுதான். இதில் எடப்பாடிக்கோ தி.மு.கவுக்கோ எந்தப் பங்கும் இல்லை. மோதி எந்தப் பக்கம் இருக்கிறாரோ அதற்கு எதிர் பக்கம் நிச்சயம் வெற்றிபெறும். அதுதான் நடந்திருக்கிறது" என்கிறார் ராதாகிருஷ்ணன்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :